தை முதல் நாளில் வடக்கில் 25 வீதிகளின் திருத்தபணிகள் ஆரம்பம்
வடக்கில் 25 வீதிகளுக்கான திருத்தப் பணிகள் தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களுக்கான பண வவுச்சர்களும் வங்கியில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா அலுவலகத்தில் இன்று (01.01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீதி அபிவிருத்திப் பணிகள்
யாழ், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீதி அபிவிருத்திப் பணிகள் தை முதலாம் நாள் ஆரம்பிக்கப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டு அபிவிருத்தி ஆண்டாக இருக்கும். யாழ் மாவட்டத்தில் 5 வீதிகளும், மன்னார் மாவட்டத்தில் ஆறு வீதிகளும், வவுனியா மாவட்டத்தில் எட்டு வீதிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு வீதிகளும் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு முழுவதுமே ஒரு அபிவிருத்திக்குரிய ஆண்டாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. அந்த வகையில் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை அரசாங்கம் இந்த ஆண்டிலே நடத்த இருக்கின்றது. விஷேடமாக வறுமை ஒழிப்பு செயற்திட்டத்தின் பிரதான பிரஜாசக்தி செயற்திட்டம் இன்றைய தினத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன. அந்த வகையிலே அனைத்து மாவட்டங்களிலும் பிரஜாசக்தி குழுமத்தின் தலைவர்கள் உட்பட நிர்வாக குழுவினர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த பிரஜாசக்தி குழுவின் ஊடாக கிராம மட்டங்களில் மக்களுக்குரிய தேவைப்பாடுகள் பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைப்படுத்தி அவர்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் காணப்பட இருக்கின்றன.
இதேபோல் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் 2026 ஆம் ஆண்டு வருடத்தில் நமது மக்களினுடைய வாழ்க்கையை சிறப்பான வகையில் மேல் எழச் செய்வதற்கும், அழகான ஒரு நாட்டை உருவாக்குவதற்கும் இந்த ஆண்டு சிறப்பாக அமையும்.
டித்வா புயலினால் அழிவுகள்
கடந்த ஆண்டு உங்களுக்கு தெரியும் எங்களுடைய அரசாங்கம் இந்த நாட்டினுடைய படுகடனில் வட்டியில் மட்டுமல்லாமல் முதலிலும் செலுத்தி இருக்கின்றோம். இந்த வருடமும் அவ்வாறான செயற்பாட்டுக்கு நாங்கள் ஆயத்த நிலையில் இருக்கின்றோம். கடந்த வருடத்தின் அபிவிருத்திகளில் சிறு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. டித்வா புயலினால் அழிவுகள் ஏற்பட்டது. இருப்பினும் எங்களுடைய அரசாங்கம் அதனை சரியான முறையில் கையாண்டு அந்த அழிவுகளிலிருந்து மக்களை மீட்டெடுப்பதோடு சுபிட்சமான ஒரு எதிர்காலத்தை 2026ல் அவர்களுக்கு வழங்குவதற்கு காத்திருக்கின்றோம்.

பாடசாலை மாணவர்களுக்கான 6000 ரூபாய் வவுச்சருக்குரிய கொடுப்பனவுகள் இன்றைய தினம் மாணவர்களுக்கு வைப்பில் இட இருக்கின்றன. பாடசாலைகள் ஆரம்பிக்கின்ற பொழுது அந்த மாணவர்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் பாடசாலைக்கு செல்வதற்குரிய ஒழுங்குகளை அரசாங்கம் செய்திருக்கின்றது.
புதிய கல்வி சீர்திருத்தம்
புதிய கல்வி சீர்திருத்தம் இந்த ஆண்டில் நடைமுறைக்கு வருகின்றது. தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு வகுப்புகள் வருகின்ற முதலாம் தவணையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, அந்த வகுப்புகளுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டினைப் பொறுத்த வரையில் எங்களுடைய அரசாங்கத்திற்கு ஒரு வெற்றியான ஆண்டாக இருக்கின்றது.

அந்த வகையிலே முக்கியமாக கொழும்பு மாநகர சபையினுடைய முதலாவது வரவு செலவு திட்டம் சவால்களுக்கு மத்தியில் வெற்றி பெறச் செய்திருக்கின்றோம். எங்களைப் பொறுத்த வரையில் நியாயமான, நீதியான பாரபட்சம் இல்லாத ஒரு அரசாங்கம் என்ற வகையில் அதற்கு எதிர்த்து வாக்களித்தவர்கள் மனம்மாறி எங்களுக்கு சாதகமாக வாக்களித்து நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம்.
இவ்வகையில் வர இருக்கின்ற ஆண்டு ஒரு வெற்றியான ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றேன். இந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான ஆண்டாக அமைய வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன் எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |