வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது : வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு
உடனடி வாகன இறக்குமதி தொடர்பான பொய்யான வதந்திகளை கண்டிக்கும் அதேவேளை இலகுரக வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனமும் நடப்பு வருடத்திலோ அல்லது தேர்தலுக்கு முன்னதாகவோ இறக்குமதி செய்யப்படாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்(VIASL) தெளிவுபடுத்தியுள்ளது.
குறித்த தீர்மானமானது நேற்று(09) நிதி இராஜாங்க அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் பிரசாத் பிரியங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மின்சார வாகன இறக்குமதி
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "வாகன இறக்குமதிக்கு குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது ஆகும் இருப்பினும் இறக்குமதியை மீண்டும் தொடங்கும் போது பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் முதன்மையாக சுற்றுலா நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படும். முதல் தொகுதியாக இருக்கும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்படும்.
இந்நிலையில் அதிகபட்ச இறக்குமதி நேரம் ஒரு மாதமாகுவதுடன் முதன்மையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதை மையமாகக் கொண்டது.
வாகன இறக்குமதி கட்டுப்பாடு
இருப்பினும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களும் அவற்றில் சேர்க்கப்படும் அத்தோடு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது இறக்குமதியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை (18%) குறைப்பது தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடினோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அறிக்கை கிடைத்தவுடன் நான்கு கட்டங்களாக வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |