சிறிலங்காவுக்கு ஐ.நா ஆணையாளர் கடும் செய்தி
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக பொறுப்புகூறலை சிறிலங்கா நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், சர்வதேசத்தில் அது தொடர்பாக செயற்பட முடியும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாடா அல்-நஷிஃப்(Nada al-Nashif ) எச்சரித்துள்ளார்.
அத்துடன் நம்பகமான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் முன்வைத்த இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஆழமான அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு, பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது மாத்திரமல்லாமல், மனித உரிமைகளை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்துமாறு இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தை அலுவலகம் வலியுறுத்துகின்றது.
உள்ளூர் பதற்றம் மற்றும் முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் தமிழ் கட்சிகளுடன் அதிபர் ஆரம்பித்துள்ள பேச்சுக்கள் மற்றும் தொல்பொருள், வனஇலகா மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு காணிகளை சுவீகரிக்கப் போவதில்லை என்ற உறுதிமொழி ஆகியவற்றுடன் அனைத்து தரப்பினருக்குமான ஞாபகார்த்த நினைவுச் சின்னம் உட்பட கடந்த கால விடயங்களை கையாளுவது தொடர்பான அறிவிப்புகள் , உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
எனினும் இந்த விடயங்கள் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஊடாக இந்த உறுதிமொழிகள் தெளிவாக தெரியக் கூடிய வகையில், இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நல்லிணக்க பொறிமுறையான உண்மை ஆணைக்குழு தொடர்பான அறிவிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் இரண்டு ஆணைக்குழுக்களை சிறிலங்கா அரசாங்கம் அமைத்திருந்தது.
எனினும் அந்த ஆணைக்குழுக்கள் மூலம் பொறுப்புகூறல் நிறைவேற்றப்படவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் பாதிக்கப்பட்டவர்களை திருப்தி செய்யும் வகையில் எதிர்பார்த்த இலக்குகளை அடையவில்லை.
கடந்த காலம் தொடர்பான பொறுப்புக்கூறலில் கணிசமான இடைவெளி காணப்படுகின்றது. தண்டனை விலக்களிப்பு காணப்படும் வரை நீடித்த சமாதானத்தை அடைய முடியாது.
51/1 தீர்மானத்தின் கீழ் பொறுப்புகூறலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் குறித்த முன்னேற்றம் தொடர்பாக அதற்கான குழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
எதிர்கால பொறுப்புகூறல்
இது தற்போது முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளுக்கு உறுதியான ஆதரவளிக்கும் ஒன்றாக இருக்கும். ஐ.நா மற்றும் ஏனைய மூலங்கள் ஊடாக சேகரிக்கப்படும் தரவுகள் எதிர்கால பொறுப்புகூறல் முயற்சிகளுக்கு பயன்படுத்த முடியும்.
இந்த செயற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகள் மற்றும் குடிசார் அமைப்புக்களுடன் செயற்றிறன் மிக்க ஈடுபாடு இதில் இருக்கும்.
கடந்த கால மீறல்கள் குறித்து சிறிலங்கா அதிகாரிகள், நம்பகமான விசாரணைகள் மற்றும் வழக்கு தொடுக்கும் செயற்பாடு உள்ளிட்ட ஏனைய பொறுப்புகூறல் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.
இந்தப் பொறுப்புகூறல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க முடியும்” - என்றார்.