சத்துருக்கொண்டான் படுகொலை விசாரணை! 37 வருட நீதிதேடல் குறித்து நாடாளுமன்றில் விசேட அறிக்கை
மட்டக்களப்பு - கொக்குவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற படுகொலை(சத்துருக்கொண்டான் படுகொலை) தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும்போதே அவர் இது தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்தினர்.
இதன்போது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ விசாரணை விபரங்களைச் சபையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பின்வருமாறு தெளிவுபடுத்தினார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணை
''கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி கொக்குவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 186 பேர் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வைரமுத்து குழந்தை வடிவேல் என்பவர் காவல்துறை மா அதிபருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.

இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 37 வருடங்கள் கழிந்த பின்னரே (கடந்த டிசம்பர் மாதத்தில்) இம்முறைப்பாடு காவல்துறைக்கு கிடைக்கப்பெற்றது தற்போது இது குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கொலை தடுப்புப் பிரிவு மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
முறைப்பாட்டாளரான குழந்தை வடிவேல் என்பவரை வாக்குமூலம் வழங்குவதற்காகப் பலமுறை அழைத்த போதிலும் அவர் காவல் நிலையத்திற்கு சமூகம் அளிக்கவில்லை.
யுத்த கால சம்பவங்கள்
அதன் பின்னர், விசாரணைகளைத் தாமதப்படுத்தக் கூடாது என்ற நோக்கில், காவல்துறை உத்தியோகத்தர்கள் நேரடியாக அவரது வீட்டிற்கே சென்று அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

யுத்த காலத்தில் இலங்கையில் பல துரதிஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தற்போதைய அரசாங்கம் பழைய ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் மிக நியாயமான முறையில் இந்த விசாரணைகளை ஆரம்பித்து நடத்தி வருகின்றது.
மேலும், இந்த வழக்கிற்குத் தேவையான சாட்சிகள் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில், விசாரணைகளைத் தொடர்ந்து எவ்விதத் தொய்வுமின்றி முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |