கடமைக்கு தகுதியற்ற காவல்துறை உத்தியோகத்தர்கள் : அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டில் உள மற்றும் உடல் ஆரோக்கிய காரணிகளின் அடிப்படையில் ஓய்வுறுத்தப்பட வேண்டிய சுமார் ஐயாயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறானவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காரணத்தினால் காவல்துறை திணைக்களத்தின் ஒழுக்க நெறிகளை பேணுவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல்வேறு பயங்கரவாத செயற்பாடுகளினால் உபாதைகளுக்கு உள்ளான 537 பேரும், வேறும் காவல்துறை பணிகளில் ஈடுபட்ட போது நோய்வாய்ப்பட்ட 1305 பேரும், தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்ட 2699 பேரும், உளவியல் ஆரோக்கியப் பிரச்சினைகள் காரணமாக இலகு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 411 உத்தியோகத்தர்களும் இந்த ஐயாயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளடங்குகின்றனர்.
இவ்வாறு ஆரோக்கிய குறைபாடுகள் உடைய உத்தியோகத்தர்களை ஓய்வுறுத்தி அவர்களுக்கு பதிலீடாக புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இலங்கை காவல்துறை திணைக்களத்தில் மொத்தமாக 85000 பேர் கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.