இறுதிப் போரில் கொடுமைகளில் ஈடுபட்ட அத்தனை பேர் மீதும் பொருளாதாரத் தடை! சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை
இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் இறுதி ஆண்டுகளில் நடந்த கொடுமைகளுடன் தொடர்புடைய தற்போதைய இராணுவத் தளபதி உட்பட முன்னாள் இராணுவத் தளபதிகள் மீது "பொருளாதாரத் தடைகளை" விதிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச ஊடக நிறுவனமான ரொய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதுடன், நேற்றைய தினம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறைந்தது 28 சேவை அல்லது ஓய்வு பெற்ற இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை முக்கிய நிர்வாக பதவிகளில் சேர்த்துள்ளார் என்று மிச்செல் பச்லெட் கூறியுள்ளார், இதில் சிலர் போர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களாவர்.
இந்தநிலையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளுக்கு எதிரான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற பொருளாதாரத் தடைகளை அரசாங்கங்கள் பரிசீலிக்க முடியும் என்றும் அவர் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.