காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் உள்ள இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம்(13) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன.
உயர் பாதுகாப்பு வலயம்
அதன் போது, காங்கேசன்துறை இந்து மயானம் அமைந்துள்ள காணியும், அதனை சூழவுள்ள காணிகளும் விடுவிக்கப்படாது, உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த நிலையில், தற்போது அப்பகுதி அனைத்தும் துறைமுக அதிகார சபையின் ஆளுகைக்குள் உள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் இந்து மயானத்தை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக சுமார் 10 வருட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமது முன்னோர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில், தமது சொந்த மண்ணில் உள்ள இந்து மயானத்திலேயே தமது உடல்களும் தகனம் செய்யப்பட்ட வேண்டும் என அங்குள்ள முதியவர்கள் பலரும் தமது இறுதி ஆசையாக கூறி வரும் நிலையில், மாயனத்தினையும் அதற்கான பாதையையும் மீள பெற்றுத் தருமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி
இதனையடுத்து, அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் வந்து அவ்விடத்தினை பார்வையிட்டார்.

அதன் போது, மயானத்தினை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி விரைவில் அதனை பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 10 மணி நேரம் முன்