கைதான பாடகரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : சிறீதரன் எம்.பி கோரிக்கை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகரை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீதனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று (06) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மண்ணிலே பிறந்து வாழ்ந்த சங்கீத்சன் ஒரு சிறந்த பொப் பாடகர். இந்த மண் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் தமிழ் மக்களுடைய அவலங்களை வெளியிலே கொண்டு வந்த இளம் பாடகரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அநுர அரசாங்கம் கைது செய்திருக்கின்றது.
மிக மோசமாக 40 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ் மக்களை வஞ்சிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள அரச பயங்கரவாத தடைச்சட்டம் தமிழ் மக்களை வஞ்சிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டது.
அதன்மூலம் பெருமளவு தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போதும் தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்காமல் அந்தக் காணிகளிலே புத்த விகாரைகளை அமைத்து தமிழ் மக்களுக்கான சுதந்திரத்தைப் பறித்து அவர்களுடைய பாடுகின்ற உரிமை, பேசுகின்ற உரிமை, எழுதுகின்ற உரிமையை பறிக்கின்ற மிக மோசமான நடவடிக்கையை அநுர அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
அரசினுடைய அங்கத்தவர்கள் மாறியிருக்கின்றார்களே ஒழிய அரச பயங்கரவாதமும் சிங்கள பேரினவாதமும் மாறவில்லை என்பதை தான் இந்த நடவடிக்கைகள் வெளிப்படையாக சொல்லுகின்றன.
தங்களுடைய உரிமைக்காக போராடி பல்லாயிரக்கணக்கானோர் தங்களை உயிர்களை தியாகம் செய்திருக்கின்ற இந்த மண்ணிலே திரும்பவும் பாடல் பாடியதற்காக ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கின்றான்.
மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என சர்வதேச நாடுகளை குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்க நாடுகளை விரயமாக கேட்கின்றோம்.
பாடகர் சங்கீத்சன் தன்னுடைய பாடல் ஊடாக உண்மையான விடயங்களை உணர்வுகளை தன் மக்களோடு பகிர்ந்து கொண்டமைக்காக அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து அடைத்து வைத்திருப்பது மனிதாபிமானத்திற்கும் மனித உரிமைகளுக்கும் அப்பாற்பட்டது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
நல்லிணக்கம் வேண்டும் என்றால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள், கைதுகளை நிறுத்துங்கள், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.
இந்தப் போராட்டத்தையும் இந்த மக்களுடைய எண்ணங்களையும் அநுர அரசு உள்வாங்கி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைக் கருத்தில் எடுத்து அவரை உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |