தையிட்டி காணி விவகாரத்தில் பின்வாங்கிய கடற்றொழில் அமைச்சர்! காற்றில் பறந்த உறுதிமொழி
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை மீள ஒப்படைப்பதாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் அளித்த உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் பலாலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் (17) அளவீடு செய்வது எனவும், அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் எனவும் கடந்த 11ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தனர்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
அதன் அடிப்படையில் இன்றைய தினம் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தையிட்டி விகாரை விகாராதிபதி, விகாரை காணியினை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயல்வதாக பலாலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் (16) இரவு மூன்று பேருந்துகளில் தென்னிலங்கையில் இருந்து விகாரை வழிபாட்டிற்கு என பலர் வருகை தந்து விகாரையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இன்றைய தினம் காலை பலாலி காவல்துறையினர் விகாரை அமைந்துள்ள பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை தமது காணிகளை அடையாளம் காட்டுவதற்கென காணி உரிமையாளர்கள் தையிட்டி விகாரை பகுதிக்கு வந்துள்ளனர்.
அழைப்பு விடுத்த கடற்றொழில் அமைச்சர்
எனினும் காலை 09.30 மணி வரையில் காணி அளவீட்டு பணிகளுக்கு காணிகளை அடையாளம் காட்ட வருமாறு காணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கடற்றொழில் அமைச்சர், மாவட்ட செயலர், தெல்லிப்பளை பிரதேச செயலர் உள்ளிட்ட எவரும் அவ்விடத்திற்கு வருகை தராத நிலையில் காணி உரிமையாளர்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை காணி அளவீட்டு பணிகள் தொடர்பில் புத்த சாசன அமைச்சோ, மாவட்ட செயலரோ தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் எதனையும் வழங்கவில்லை எனவும் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இன்றி விகாரை காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது என விகாராதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |