இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட கோடிக்கணக்கான தங்க கட்டிகள் கடலில் மீட்பு
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் கடலில் வீசப்பட்ட நிலையில் அவற்றை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக இரகசியதகவல் கிடைத்த நிலையில் நேற்று முன்தினம் (04) இரவு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை உதவியுடன் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு ரோந்து சென்றனர்.
தங்க கட்டிகளை கடலில் வீசிவிட்டு
இதன்போது கடத்தல்காரர்கள் இந்திய கடலோர காவற்படையை கண்டதும் தாம் கொண்டு வந்த தங்க கட்டிகளை கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
எனினும் அவர்களை விரட்டிச் சென்ற அதிகாரிகள் கடத்தல்காரர்களின் படகில் ஏறிஅதில் இருந்த 3 பேரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
அதில் இலங்கையில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட தங்கக்கட்டிகளை, ரோந்து படகை கண்டதும் பயந்து கடலில் வீசியதாக தெரிவித்துள்ளனர்.
தங்கக்கட்டிகளை தேடும் பணியில்
எனவே நேற்று(05) அதிகாலை முதலே மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் வேதாளை மற்றும் மண்டபத்திற்கு இடைப்பட்ட முயல் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள் பார்சலை கைப்பற்றினார்கள். அதில் சுமார் 6 கிலோ தங்கக்கட்டிகள் இருந்ததாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டிகளை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகம் கொண்டு சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |