நிகழ்வுகளில் மின்விளக்குகள் மற்றும் வாணவேடிக்கைகளை பயன்படுத்துவது குறித்து முக்கிய தீர்மானம்
திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும், இதற்கு மேலதிகமாக மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (25.08.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
முக்கிய எச்சரிக்கை
கடந்த 20ஆம் திகதி பண்டத்தரிப்பு, பிரான்பற்றுப் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயில் திருவிழாவின் போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள் மற்றும் வானவேடிக்கைகளின் தாக்கத்தால் 500 இற்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் புதிதுபுதிதாக அறிமுகமாகும் மின்விளக்குகள், ஒளியமைப்புகள் மற்றும் பிற கருவிகளின் பயன்பாடு தொடர்பில் உரிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
பண்டத்தரிப்புச் சம்பவம், இத்தகைய ஒழுங்குமுறைகள் இனிமேலும் தாமதிக்கப்படக் கூடாது என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், குறித்த சம்பவம் சமூகத்தில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் தேவையான ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |