இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு- யாழ் கடற்தொழிலாளர் சம்மேளனம் எடுத்துள்ள தீர்மானம்!
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து எதிர்வரும் புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டின் காரணமாக வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். எனினும் அண்மையில் அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக நாலு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
அவர்களுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு மேலும் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை இந்த அரசாங்கம் தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாண நகரில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்த உள்ளோம்.
எதிர்வரும் புதன்கிழமை காலை யாழ் பண்ணை சுற்று வட்டத்தில் இருந்து ஆரம்பித்து கடற்தொழில் அமைச்சு இந்திய துணை தூதரகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் என்பவற்றிற்கு பேரணியாகச் சென்று இந்திய மீனவர்களின் அத்துமீறும் செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு கோரும் மகஜர் ஒன்று கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் தமக்கு ஆதரவை வழங்க வேண்டும்.
நேற்றைய தினம் அனைத்து மாவட்ட மீனவ சங்கங்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க உதவி புரிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.