இனப்பிரச்சினை பேச்சுகளில் பொறுப்புடன் செயற்படவேண்டும் - தமிழர் பிரதிநிதிகளுக்கு விசேட அறிக்கை
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மீட்டெடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் தமது பொறுப்பினை சரியான முறையில் கையாள வேண்டும் என வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலுள்ள மதத்தலைவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மற்றும் மாணவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தரப்பினருக்கு அவர்கள் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளனர்.
வடகிழக்கில் இராணுவ பலத்தை குறைத்தல்
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், வடகிழக்கில் சிறிலங்கா இராணுவ பலத்தை 25 வீதத்தால் ஆவது குறைத்து, தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படுவதற்கு முன், வடகிழக்கின் இராணுவ எண்ணிக்கை 1983 ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைக்கு குறைக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உடனடி பிரச்சினையான இராணுவமயமாக்கலைக் குறைத்து சிறிலங்கா அரசு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தாத பட்சத்தில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது அர்த்தம் அற்றது என வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலுள்ள மதத்தலைவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மற்றும் மாணவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு
எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும் எனவும் இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனடிப்படையிலேயே எந்த ஒரு முன்னெடுப்புகளும் மேற்கோள்ளப்பட வேண்டும் என கூட்டாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டு அறிக்கையில் நல்லை ஆதீனத்தின் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகத்தியர் அடிகளார், வேலன் சுவாமிகள் , அருட்தந்தையர்களான ஜோசப் மேரி, கந்தையா ஜெகதாஸ், செபமாலை பிரின்சன், ரொபேர்ட் சசிகரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அத்துடன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோ. கனகரஞ்சினி, குரலற்றவர்களின் குரல் அமைப்பாளர் கோமகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமார், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நி.தர்சன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
