பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரியின் படுகொலை: பிரதான சந்தேக நபர் அதிரடி கைது
பூஸ்ஸ (Boossa) சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (15) போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்ற வேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொட குளியாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான விஜேமுனி லலந்த பிரிதிராஜ் குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரியான சிறிதத் தம்மிக்க கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி மாலை துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அக்மீமன, தலகஹபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பிஸ்டல் வகையைச் சேர்ந்த துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறை அதிகாரி
துப்பாக்கிதாரி அவரது தலைப் பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்ததாகவும் எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
சிறை அதிகாரி சிறிதத் தம்மிக்க, கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் அதிகாரியாக சில காலம் பணியாற்றியுள்ளார்.
அங்கு பணியாற்றிய காலத்தில் அவருக்கு பாதாள உலக குழுவிலிருந்து அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
You may like this,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
