ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்கள் : அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குதல்
அதற்கமைய குறித்த முன்னாள் ஜனாதிபதிகள் தாம் அனுபவித்த வரப்பிரசாதங்களை மீள அரசாங்கத்திடம் கையளித்து வருகின்றனர். எனினும், அந்த ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.
இந்தநிலையில், சிலர் தாங்கள் பயன்படுத்திய சில பாதுகாப்பு வாகனங்களை கூட மீள ஒப்படைத்துள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் சில வரப்பிரசாதங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
எனவே, பாதுகாப்பு வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு வரப்பிரசாதங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளால் கோரிக்கை முன்வைக்கப்படுமாயின், அது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய தயாராகவுள்ளது.
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் கீழ் வராத பாதுகாப்பு சார் விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
