இலாபமீட்டும் தலமாக மாறவுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம்!
அம்பாந்தோட்டை துறைமுகத்தினை இலாபகரமான துறைமுகமாக மாற்றுவதற்கான முன்மொழிவுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்களை அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு துறைமுக அதிகாரசபை அதிகாரிகளுக்கு கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வருமானம் ஈட்டும் வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி
"அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மொத்த பங்குகளில் 15 சதவீதம் இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமானது, ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இதுவரை எவ்வித இலாபமும் கிடைக்காததால் அரசாங்கத்திற்கு ஈவுத்தொகை கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
கோவிட்-19 தொற்று மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அண்மைய பொருளாதார நெருக்கடி போன்றவற்றின் காரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் அதன் வருமானத்தினை அதிகரிக்கவோ இலாபம் ஈட்டவோ முடியாத நிலை உருவாகியுள்ளது.
எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் சில்வா தெரிவித்தார்."
கொள்கலன்களின் மீள் ஏற்றுமதி
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பிரதான தொழிற்பாடாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்வது அமைந்துள்ளது, இதனுடன் எதிர்காலத்தில் கொள்கலன்களின் மீள் ஏற்றுமதியினையும் ஆரம்பித்தால் துறைமுகம் இலாபமீட்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்த சந்திப்பின் போது, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுடன் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என அம்பாந்தோட்டை துறைமுக பிரதான நிறைவேற்று அதிகாரி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.