கடும் நடவடிக்கை எடுங்கள் - கோட்டாபய கண்டிப்பான உத்தரவு
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிகரித்த விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக, அவசரகால சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி, அரிசி விற்பனை செய்து வருகின்றமை தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதையடுத்தே, ஜனாதிபதி, வர்த்தக அமைச்சருக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அரிசி ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி, அரிசி விற்பனை செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி விற்பனை செய்யாத பட்சத்தில், அவர்களின் ஆலைகளை அரசாங்கத்திற்கு பொறுப்பேற்றேனும், அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.