உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகாரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கிய ரிஷாத் பதியுதீன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தோடு உடந்தையாக இருந்தவர்களுக்கு தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அரசியல் பாதுகாப்பு அளித்துள்ளதுடன் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இந்த விடயங்கள் குறித்து மேலும் தனது வாதங்களை திலீப பீரிஸ் பின்வருமாறு பகிரங்கப்படுத்தியிருந்தார்.
தாக்குதலின் உண்மையான பொறுப்பாளர்
“சஹ்ரான் ஹாஷிமை பாதுகாப்பதன் ஊடாக தாக்குதலின் உண்மையான பொறுப்பாளர்களைப் பாதுகாக்க இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று செயற்பட்டதாக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே வவுனதீவு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்பட்டுள்ளது. வவுனதீவு காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதலை முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் மேற்கொண்டதாக ஆரம்பத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 12ஆம் திகதி கிரிதலே புலனாய்வு முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்த கர்னல் மத்துமகே, வவுனதீவு சம்பவத்தை சஹ்ரான் மேற்கொண்டதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இந்தத் தகவல்களை மறைத்தவர்கள் அனைவரும் முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சாலேயுடன் தொடர்புடையவர்கள். தாக்குதலாளிகளுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன். மற்றையவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன் என்ற வர்த்தகர்.
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல்
சந்தேகநபரை விடுவித்த கோட்டாபய
அலாவுதீன், ஷங்ரி-லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இன்ஷாப் அஹமட்டின் மாமனார். இன்ஷாப் அவரது மகளை திருமணம் செய்துள்ளார்.

அலாவுதீனுக்கு சொந்தமான அதிவேகப் படகுகளைப் பயன்படுத்தி, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் உள்ளிட்ட சிலர் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.
மேலும், இன்ஷாப் அஹமட்டின் மனைவியான அலாவுதீனின் மகள், தாக்குதலுக்குப் பின்னர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டார்.
அலாவுதீன், கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவளித்தவர் என்பது இதற்குப் பின்னணியாக இருந்திருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து அரச புலனாய்வு சேவையின் ஒரு குழுவும் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்த போதிலும் அவற்றை மறைத்திருக்கலாம் என விசாரணைகளில் சந்தேகம் எழுந்துள்ளது.
தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய 16 தொடர்பாளர்கள்
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் 27ஆம் திகதி(2019) சாய்ந்தமருதில் தாக்குதல்தாரர்களுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கூறப்பட்ட 16 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

அவர்கள் அனைவரும் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழக்கவில்லை. சிலரையாவது உயிருடன் கைது செய்திருக்க முடிந்திருக்கலாம் . அந்தக் காலப்பகுதியில் சாய்ந்தமருது பகுதி இராணுவத்தின் பொறுப்பில் இருந்தது.
இதனால், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் நோக்கில் இராணுவத்தின் சில தரப்பினர் திட்டமிட்டு அந்த 16 பேரையும் கொன்றார்களா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |