அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - மருத்துவர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளரும், கொரோனா ஒழிப்புக்கான ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் அன்வர் ஹம்தானி (Dr.Anwar hamdani) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 வீதம் முதல் 20 வீதத்திற்கு இடையிலான எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
இந்த நிலைமை காரணமாக மக்கள் தற்போதைய சந்தர்ப்பதில் ஒன்றுக்கூடுவதைத் தவிர்த்து புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது முக்கியமானது.
கொவிட் காரணமாக இதுவரை வைத்தியசாலைகளில் 7,010 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் ஒக்சிஜனை நம்பி வாழும் 105 நோயாளர்கள் இருப்பதுடன் 55 நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒக்சிஜனை நம்பியுள்ள மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு மட்டத்திற்கு குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அலையின் போது ஒக்சிஜனை நம்பி வாழும் நோயாளர்களின் எண்ணிக்கை 1,038 வரை அதிகரித்ததுடன், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.