அதிகரிக்கும் கொவிட் தொற்று -இராணுவத் தளபதி வெளியிட்ட அறிவிப்பு
கடந்த இரண்டு தினங்களாக நாட்டில் நாள் ஒன்றுக்கு 700 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா(Shavendrasilva) தெரிவித்தார்.
திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 22வது படைப் பிரிவில் இன்று (27) நடைபெற்ற சேதனப் பசளை உற்பத்திகளை உத்தியோகபூர்வமாக இலங்கை லக்பொஹர நிறுவனத்திற்கு கையளித்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் தற்போது நாளொன்றுக்கு 15 தொடக்கம் 30 வரையிலான மரணங்கள் பதிவாகுவதாகவும் இதற்குள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு தகுதியான மக்கள் தொகையில் 84 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளில் தடுப்பூசி ஏற்றப்பட்ட விகிதாசாரத்தை விட இந்த விகிதாசாரம் கூடிய அளவாக பதிவாகியுள்ளதாகவும் தற்போது பூஸ்டர் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அரச தலைவரின் விஷேட அறிவுரையின் பேரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வர முடியாதவர்களுக்கு நடமாடும் சேவை மற்றும் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 20 வயதுக்கு மேற்பட்ட புற்றுநோய் உட்பட தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி இன்று முதல் ஏற்றப்பட்டு வருவதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய சுகாதார அமைச்சின் திணைக்களங்கள் இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.