இலங்கையின் பண வீக்கம் அதிகரிப்பு
இலங்கையின் பண வீக்கம் கடந்த நவம்பர் மாதம் 11.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இம்முறையில் கணிப்பிடப்படும் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் பதிவாகியிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட முதன்மைப் பணவீக்கம், ஒக்ரோபரில் 8.3 சதவீதத்திலிருந்து நவம்பரில் 11.1 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை ஆண்டுச் சராசரி அடிப்படையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் ஒக்ரோபரில் 5.7 சதவீதத்திலிருந்து நவம்பரில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.
உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்களால் பணவீக்கம் அதிகரிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கமானது ஒக்ரோபரில் 11.7 சதவீதத்திலிருந்து நவெம்பரில் 16.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கமும் 5.4 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்படக்கூடிய அதிகரிப்பினால் எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் முன்னெதிர்வு கூறமுடியாத அளவிற்கு மேலும் உயர்வடையக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது..