மணித்தியாலத்திற்கு 5 உயிர்கள் பறிபோகும் ஆபத்து! இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
வீரியம் மிக்க கொரோனா, டெல்டா வைரஸ் காரணமாக மணித்தியாலத்திற்கு 5 மனித உயிர்கள் பலியாகும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் நாட்டை முடக்குவதற்கு தொடர்ந்தும் தாமதிக்கவேண்டாம் என அரச வைத்திய அதிகாரிகள் பேரவை செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதன் பாதிப்பு தொடர்பாக குறிப்பிடும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துளளார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச வைத்திய அதிகாரிகள் பேரவை என்றவகையில், டெல்டா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, நாளுக்குநாள் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கும் எமது நாட்டை உடனடியாக முடக்கவேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றோம்.
தற்போது ஒரு மணித்தியாலத்துக்கு 5 மனித உயிர்கள் கொவிட் தொற்றினால் பலியாகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் உடனடியாக கடும் தீர்மானம் மேற்கொண்டு இந்த நிலைமையை கட்டுப்படுத்தவில்லை என்றால், எதிர்வரும் நாட்களில் நிலைமை மிகவும் மோசமடையும்.
பொருளாதாரத்தை காரணம் காட்டி நாட்டை முடக்கும் தீர்மானத்தை பிற்போடும் ஒவ்வொரு நாளும் டெல்டா வைரஸ் தீவிரமாக நாடுபூராகவும் விரிவடைந்து, நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பை மேலும் பாதிப்படையச்செய்யும்.
அதேபோன்று டெல்டா வைரஸ் பரவுவதால் மேலும் திரிபுபடுத்தப்பட்ட வைரஸ் வகைகள் அதிகரிக்கும் என விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அவ்வாறு புதிதாக உண்டாகும் வைரஸ்களுக்கு தற்போது பயன்படுத்திவரும் கொவிட் தடுப்பூசியினால் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த முடியாத நிலை இருக்கின்றது.
அதனால் அது தற்போது மேற்கொண்டுவரும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை செயற்திறனற்றதாக்க காரணமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.