பல பகுதிகளில் சிறியளவிலான வெள்ள அபாயம்: நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக, சில பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை தொடர்ந்து நீடிப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் நில்வலா கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் சில இடங்களில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மகாவலி கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சியும், மகா ஓயாவின் நீரேந்துப் பகுதிகளில் சுமார் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
நீர்மட்ட நிலவரம்
நில்வலா கங்கையின் அக்குரஸ்ஸ மற்றும் அதற்குக் கீழ்ப்பட்ட பகுதிகளிலும், கிங் கங்கையின் கீழ்ப்பகுதியான பத்தேகம மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் சிறியளவிலான வெள்ள நிலைமை தொடர்ந்து காணப்படுகிறது.

இதனால் தாழ்நிலப் பகுதிகள் சில நீரில் மூழ்கும் அபாயம் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வருகின்ற போதிலும், மில்லக்கந்த மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர்மட்டம் சிறியளவிலான வெள்ள மட்டத்திற்கு அண்மித்த நிலையில் காணப்படுகிறது.
அதேவேளை, களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களும் படிப்படியாகக் குறைந்து வருகின்றன.
மகாவலி கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் தற்போது அபாயகரமான அளவில் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என்றாலும், எதிர்வரும் நாட்களில் பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நீர்மட்டம் திடீரென உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆறுகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்திற்கு ஏற்ப வான் கதவுகள் திறக்கப்படும் நிலைமைகள் மாறுபடக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |