இணையக் கட்டமைப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் அமெரிக்கா! ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு
ஈரானிய வணிக நிறுவனங்களின் இணையதள முகவரிகளை அமெரிக்கா முடக்குவது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தைச் சிதைப்பதையும் பொதுமக்களின் இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரானின் தேசிய சைபர்ஸ்பேஸ் மையத்தின் (National Cyberspace Centre) துணை இயக்குநர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இணையக் கட்டமைப்புகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள இணையக் கட்டமைப்புகளைச் சார்ந்திருப்பது தற்போது அரசியல் அழுத்தத்தைச் செலுத்தும் ஒரு கருவியாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச இணைய விதிமுறைகளுக்கு முரணாக வாஷிங்டன் செயல்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
சமீபத்திய அமெரிக்கத் தடைகள் காரணமாக டெதர்லேண்ட் (Tetherland) போன்ற கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளங்கள், செயற்கை நுண்ணறிவுத் தளமான ஹூஷா (Hoosha) மற்றும் வெளியீட்டுத் தளமான விர்கூல் (Virgool) ஆகியவற்றின் சர்வதேச .com மற்றும் .io முகவரிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்பட்டுள்ளன.
உச்சத்தில் மோதல்கள்
இதனையடுத்து அந்நிறுவனங்கள் ஈரானின் உள்நாட்டு .ir மற்றும் .ai முகவரிகளுக்குத் தங்களது சேவைகளை மாற்றியுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த கோடாடி (GoDaddy) போன்ற பதிவு நிறுவனங்களிலிருந்து தங்களது இணையதள முகவரிகளை உடனடியாக மாற்றுமாறும் சர்வதேச முடக்கங்களைத் தவிர்க்க உள்நாட்டு .ir முகவரிகளுக்கு மாறுமாறும் ஈரானிய சைபர் பாதுகாப்பு அமைப்புகள் (AFTA) அந்நாட்டு நிறுவனங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தநிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இராணுவ மற்றும் இராஜதந்திர மோதல்கள் உச்சத்தில் உள்ளதன் அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நிலவும் கடல்சார் முற்றுகைகளுக்கு இணையாக இணையம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதை இச்சம்பவம் வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |