ரிஷாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்
மலையக சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கின் ஐந்தாவது சந்தேகநபராக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தவர்களுக்கான விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்து உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி ஹஷாலினி கடந்த ஜூலை 03ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் தரகர் ஆகியோர் கைது செய்து மன்றில் முன்னிலப்படுத்தியிருந்த நிலையில், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஹிஷாலியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு – புதுக்கடை மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன் போது, ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கின் ஐந்தாவது சந்தேகநபராக ரிஷாட் பதியூதீனின் பெயரும் உள்ளடக்கப்படுவதாக நீதவான் அறிவித்தார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரை அடுத்த வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய தாக்குதல்தாரிகளுக்கு உதவியதாக தெரிவித்து ரிஷாட் பதியுதீன் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.