ரிசாட் விவகாரத்தில் பக்கச்சார்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும் - ஜகத் குமார வெளியிட்ட தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மீதான விசாரணைகளின் பின்னர், நிச்சமயாக அவருக்கெதிராக பக்கச்சார்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ அரச தலைவராக இருந்திருந்தால் ரிஸாட்டின் இல்லத்தில் இடம்பெற்ற இதுபோன்ற அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் மூடிமறைக்கப்பட்டிருக்கும் என அவர் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ரிஷாட் பதியூதீன் குறித்தும் அவர் மீதான விசாரணைகள் பற்றியும் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சஜித் இன்று ஆட்சியில் இருந்திருந்தால் ரிஷாட்டின் வீட்டில் நிகழ்ந்த இப்படியான அதிர்ச்சி சம்பவங்களும் வெளிவந்திருக்காது. ஆனால் ரிஸாட்டுடன் தொடர்புகளில்லை என்று இன்று சஜித் கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே சட்டத்தை அனைவருக்கும் பொதுவாக அமுல்படுத்த தற்போதைய அரசாங்கத்தின் அரச தலைவரும், பிரதமரும் உள்ளனர் - நிச்சயமாக சட்டம் தன் கடமையை செய்யும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.