ரோபோவின் தவறால் ஒருவர் பலி : தென்கொரியாவில் நிகழ்ந்த சோகம்!
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தொழிற்சாலை ஒன்றில் காய்கறி பெட்டிகளை கன்வேயர் பெல்டில் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரோபோ ஒன்று, காய்கறி பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொன்ற சம்பவமொன்று தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் (08) தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அறுவடை செய்யப்பட்ட மிளகுகளை தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் பணிகளை குறித்த தொழிற்சாலையில் ரோபோக்களே செய்து வருகிறது.
சிகிச்சை பலனின்றி
இவ்வாறு தரம் பிரித்த மிளகு பெட்டிகளை கன்வேயர் பெல்டிற்கு ஏற்றும் பணி நிகழ்ந்துகொண்டிருக்கையில் அருகில் நின்ற ஊழியரையும் தூக்கி இந்த ரோபோ கன்வேயர் பெல்டில் போட்டு அழுத்தியுள்ளது.
இதன் போது குறித்த ஊழியரின் முகம் மற்றும் மார்பு பகுதிகள் நசுங்கிய நிலையில் அந்த ஊழியர் அலறி சத்தமிட்டுள்ளார், இதன் போது அங்கு அருகிலிருந்த மற்றைய ஊழியர்கள் இவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
உயிரிழந்த ஊழியர் தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.
குறித்த தொழிற்சாலை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்இ இனி வரும் காலங்களில் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பாடாமல் இருக்கும் வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எத்தனையோ நன்மைகளை உலகிற்கு புரிந்திருந்தாலும் இத்தகைய விபத்துக்கள் செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கையினை கேள்விக்குறியாக்குகின்றது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.