மியான்மாரின் விமான தளங்கள் மீது அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல்!
மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற்றும் ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, இன்று வியாழக்கிழமை அதிகாலை மத்திய நகரமான மக்வே அருகிலுள்ள ஒரு விமானத் தளத்தில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாகவும் குண்டு வெடிப்புக்குப் பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர், மக்வேயின் வடகிழக்கில் மெய்க்டிலாவில் உள்ள நாட்டின் முக்கிய விமானத் தளத்தின் மீது ஐந்து ராக்கெட்டுக்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவ சதித் திட்டத்துக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கு எவரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
அத்துடன், உயிரிழப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு இராணுவத் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை.
