வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் கொந்தளிப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால், கடற்படையினர் மற்றும் கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒக்டோபர் 30ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிவுறுத்தலின்படி,
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கப் பிரதேசம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (31) தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று
தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை நோக்கி நகரும் இத்தொகுதி மேலும் வலுவடையக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 10° வடக்கு முதல் 15° வடக்கு வரையிலும், 80° கிழக்கு முதல் 90° கிழக்கு வரையிலும் எல்லைப்படுத்தப்பட்ட வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடலும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |