ரஷ்யாவுடன் மறைமுகப் போரில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது; ரஷ்யா குற்றச்சாட்டு - ஸெலென்ஸ்கியின் அமெரிக்க பயணத்தின் எதிரொலி!
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் நேரடியாகவும், அமெரிக்கா மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா உக்ரைன்க்கு வழங்கும் இராணுவ உதவிகள் மூலம் இந்த யுத்தத்தில் மறைமுகமாக பங்குபற்றுவதாக அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதர் அனாட்டோலி அன்டோனோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியின் அமெரிக்க பயணத்தில் அமைதிக்கான குரல் கேட்கவே இல்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யா குற்றச்சாட்டு
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளநிலையில், உக்ரைன்க்கு 1.8 பில்லியன் டொலர் இராணுவ உதவி வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவினால் உக்ரைன்க்கு வழங்கப்படும் குறித்த இராணுவ உதவிகள் தொடர்பிலேயே தூதுவர் அன்டோனோவ் அமெரிக்காவை சாடியுள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ உதவி
மேலும் அவர், ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கும் பற்றியொட்(Patriot) ஏவுகணைத் தற்காப்பு முறை உள்ளிட்ட உதவிகள் இதில் அடங்கும்.
உக்ரேனுக்கு மேலும் 45 பில்லியன் டொலர் அவசர உதவி வழங்கும் திட்டமும் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் உள்ளது.
அமெரிக்காவின் குறித்த இராணுவ உதவிகள் தூண்டுதல் நடவடிக்கை என்றும், கடுமையான பின் விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்றும் அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதர் அனாட்டோலி அன்டோனோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
எல்லாத் தரப்பும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வரும் நிலையில் அமெரிக்காவின் குறித்த இராணுவ உதவியானது கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸெலென்ஸ்கியின் அமெரிக்க பயணத்தின் எதிரொலி
இதேவேளை உக்ரைன் அதிபரின் அமெரிக்கா பயணத்தில் எந்தவித அமைதிக்கான குரலும் கேட்கவில்லை, யுத்த தூண்டுதல்களே இடம்பெறுகின்றது என ரஷ்யா குற்றம் சுமத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
