புடினின் மிருக்கத்தன ஆக்கிரமிப்பு - ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
உக்ரைன் மீதான மிருக்கத்தனமான ஆக்கிரமிப்பிற்கு விளாடிமீர் புடின் அதிக விலை கொடுக்க வேண்டி ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்சுலா வண்டர் லெயன் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு தடைவிதிப்பது தொடர்பான முன்மொழிவை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிராக ஆறாம் கட்ட தடைகளை உள்ளடக்கிய முன்மொழிவுகளை ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வெண்டர் லெயன் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
ஷ்யாவின் எண்ணெய், பொருளாதாரம், பிரசார துறை மற்றும் இராணுவத்தை மையப்படுத்தி நான்கு பிரிவுகளில் புதிய தடைகளை ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்சுலா வெண்டர் லெயன் முன்வைத்துள்ளார்.
அந்த வகையில் ரஷ்யாவின் மசகு எண்ணெய் இறக்குமதியை தடைசெய்வதற்கு ஆறு மாதங்களும் அது சார்ந்த உற்பத்திகளை எட்டு மாதங்களுக்குள் தடைசெய்வதற்கும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் ரஷ்யாவின் எண்ணெய்யில் பெரிதும் தங்கியுள்ள ஹங்கேரி மற்றும் சிலோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு படிப்படியாக விலகும் திட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இலகுவானது ஒன்று அல்ல என்ற போதிலும், அதனைச் செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் ஊர்சுலா வெண்டர் லெயன் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனை வரைபடத்தில் இருந்து அழிப்பதற்கு விளாடிமீர் புடின் விரும்புகின்றார் எனவும், அதில் அவர் வெற்றிபெற மாட்டார் எனவும் கூறியுள்ள ஊர்சுலா வெண்டர் லெயன், அதற்கு எதிராக உக்ரைன் ஒற்றுமையுடன் எழுந்து நின்று போராடுகின்றது என கூறியுள்ளார்.
