நிபந்தனைகளுடன் உக்ரைனுடன் பேச்சு நடத்த முன்வந்தது ரஷ்யா
மின்ஸ்க் நகரத்தில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப், தெரிவித்துள்ளார்.
ஆனால், உக்ரைன் “இராணுவமயமாக்கல் இல்லாமை உட்பட “சார்பற்ற நிலையை” அறிவிப்பதாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
எப்போதும் உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாது என்பதே ரஷ்யாவின் நோக்கமாக இருந்து வருகிறது.
உக்ரைன் அதிபர், விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த அடிப்படையில் அவர் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவார் என்பதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லை.
மின்ஸ்க் நகரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. ஏனெனில், 2014-ல் கிழக்கு உக்ரைனில் வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தங்கள் அங்கு தான் கையெழுத்தாகின.
உக்ரைனை ஆக்கிரமித்ததன் மூலம், ரஷ்யாவின் தலைவர் அந்த ஒப்பந்தஙக்ளை கிழித்தெறிந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோஃப் உக்ரைன் இராணுவம் ஆயுதங்களைக் கீழே போடும் வரை பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று கூறியிருந்தார்.
