ரஷ்ய படைகளின் அட்டூழியங்கள்..! ஒரே இடத்தில் சித்திரவதைக்குள்ளான 63 சடலங்கள்: அரங்கேறிய கொடூரங்கள்
ரஷ்ய படைகள் வெளியேறிய கெர்சன் நகரில் ஒரே இடத்தில் 63 சடலங்களை உக்ரைன் அதிகாரிகள் கண்டெடுத்ததாகவும் அனைத்தும் சித்ரவதைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒன்பது மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் உக்ரைனின் கிழக்கு கெர்சான் பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளன.
இதையடுத்து அங்கு உள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக உக்ரைன் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
63 சடலங்கள்

இந்த ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் கடுமையான சித்திரவதை காயங்களுடன் 63 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.
விசாரணை தொடங்கப்பட்ட உடனேயே ஒரு இடத்தில் 63 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்னும் எவ்வளவோ இடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளது என உக்ரைனின் உள் விவகாரத்துறை அமைச்சர் டெனைஸ் மொனாஸ்ட்ரைஸ்கி கூறியுள்ளார்.
மேலும், கெர்சன் நகரம் ரஷ்யாவின் பிடியில் இருந்த போது ஏராளமான போர்க் குற்றங்களும், சர்வதேச போர் விதி மீறல்களும் அரங்கேறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
போர் விதி மீறல் குற்றச்சாட்டு

அதேவேளை, கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் மீது எலக்ட்ரிக் ஷாக் பிரயோகப்படுத்தப்பட்டிருப்பதும், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குச்சியால் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதும் செயற்கை மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், போர் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் அடுக்கடுக்கான போர் விதி மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.