ஜெலென்ஸ்கியின் அறிவிப்பு! உக்ரைன் மீது பெரும் தாக்குதலுக்கு தயாரான ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரமும் ஒரு பிரம்மாண்ட வான்வழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கைகள் இன்னும் நடைமுறையில் உள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொதுமக்கள் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அவர் அவசரமாக வலியுறுத்தியுள்ளார்.
பெரிய அளவிலான தாக்குதல்
தனது இரவு நேர காணொளி உரையில் இது குறித்துப் பேசிய அவர், "ரஷ்யத் தாக்குதல்கள் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

Image Credit: Britannica
ஒரு பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன, அதற்கான தயாரிப்புகளையும் அவர்கள் செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது எங்களிடம் உள்ள இராணுவ விநியோகங்களைக் கொண்டு, எங்களது பாதுகாவலர்கள் 24 மணி நேரமும் தங்களால் இயன்ற முழுத் திறனுடன் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் எச்சரிக்கை
உக்ரைனிய இராணுவத்துடன் தொடர்புடைய தலைநகர் கீவ்வில் உள்ள இலக்குகள் மற்றும் முக்கிய முடிவெடுக்கும் மையங்கள் மீது திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தப் போவதாக ரஷ்யா கடந்த வாரம் எச்சரித்திருந்ததுடன், அங்கிருக்கும் வெளிநாட்டினரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த எச்சரிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக, 2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட மிகக் கடுமையான மற்றும் பாரிய குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றை ரஷ்ய இராணுவம் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |