ட்ரம்பின் சொல்லுக்கு அடிபணிந்த இஸ்ரேல் - ஹிஸ்புல்லா! திரும்பிச் செல்லும் படைகள்
லெபனானில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்தியஸ்தர்கள் மூலம் தனித்தனியாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடல் ஒன்றை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலியப் படைகள்
மேலும், எந்தவொரு இஸ்ரேலியப் படைகளும் பெய்ரூட்டிற்குள் நுழையாது என்றும், லெபனான் தலைநகரை நோக்கிச் சென்ற படைகள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதிநிதிகள் மூலம் ஹிஸ்புல்லா அமைப்புடனும் மிகவும் நல்ல உரையாடல் ஒன்றை நடத்தியதாகக் கூறியுள்ள ட்ரம்ப், அனைத்துத் துப்பாக்கிச் சூடுகளும் நிறுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஈரானின் பதிலடி
தாஹியே மாவட்டம் என அறியப்படும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப்பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அச்சுறுத்தியதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்ரேலியப் பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா தொடர்ந்து ராக்கெட்டுகளை ஏவினால், அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்திருந்ததுடன், நெதன்யாகு அப்பகுதியில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப்பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்தால், வடக்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பாளர்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரானின் மத்திய இராணுவத் தலைமையகம் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |