உக்ரைன் அணு உலைக் கழிவு மீது ரஷ்யா தாக்குதல்! விரைகிறது ஆய்வுக்குழு
உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள அணு உலைக் கழிவு மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளதாக ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனுடன் ரஷ்யா போர்தொடுத்து இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகின்றன. முக்கிய நகரங்களின் மீது குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
உக்ரைனின் இராணுவ நிலைகளைக் குறிவைத்து ரஷ்யா இந்த தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலே உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள அணு உலை கழிவு மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து சர்வதேச அணுசக்தி முகாமையின் இயக்குனர் ஜெனரல் ரபெல் குரோஸ்சி (Rafael Crozi) கருத்துத் தெரிவிக்கையில்,
கிவ்விலுள்ள அணு உலைக் கழிவு மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக நேற்று இரவு உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் அணு உலைக் கழிவுக் கட்டிடம் சேதமடைந்ததா? என்ற தகவல் தெரியவில்லை. அணு உலைக் கழிவு சேதமடைந்திருந்தால் மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும்.
அந்த தாக்குதலுக்கு உள்ளான கட்டிடத்தை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
