உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் : பற்றி எரியும் குடியிருப்புகள்
உக்ரைன் (ukraine)தலைநகர் கீவ் மீது இன்று சனிக்கிழமை(24) ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் கீவ் மீது ரஷ்யா 250 ட்ரோன்கள் மற்றும் 14 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது, இதனால் குடியிருப்பு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
தலைநகர் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு பாரிய தாக்குதல்
போர் தொடங்கியதிலிருந்து நகரத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். ஆறு ஏவுகணைகள் மற்றும் 245 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
"இதுபோன்ற ஒவ்வொரு தாக்குதலும், போர் நீடிப்பதற்கான காரணம் மொஸ்கோவில் உள்ளது என்பதை உலகத்திற்கு உறுதியாகிறது" என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (volodymyr zelenskyy)X இல் பதிவிட்டுள்ளார்.
துருக்கியில் இரு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்யாவும் உக்ரைனும் கைதிகள் பரிமாற்றத்தில் பங்கேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவை போர் நிறுத்தத்திற்குள் தள்ள என்ன செய்யவேண்டும்
"கடினமான இரவை" விவரித்த ஜெலென்ஸ்கி, கீவ் முழுவதும் தீ மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும், வீடுகள், வணிகங்கள் மற்றும் கார்கள் தாக்குதல்கள் அல்லது இடிபாடுகளால் சேதமடைந்ததாகவும் கூறினார்.
"ரஷ்ய பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை குறிவைத்து விதிக்கப்படும் கூடுதல் தடைகள்" மட்டுமே மொஸ்கோவை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளத் தள்ளும் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
கடந்த வாரம், உக்ரைன் மொஸ்கோ மீது தாக்குதல்கள் உட்பட நூற்றுக்கணக்கான வெடிக்கும் ட்ரோன்களை அந்நாட்டில் ஏவியதாக ரஷ்யா கூறியது. 485 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
