உக்ரைன் மீது திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா! மீண்டும் உக்கிரமடையும் போர்க்களம் (படங்கள்)
உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் இன்று(13) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் நகரை குறிவைத்து ரஷ்யா ஏவிய 10 ஏவுகணைகளை உக்ரைன் விமானப் பாதுகப்புப் படை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாகவும், எனினும், ராக்கெட் ஏவுகணைகளின் உடைந்த பாகங்கள் கீழே விழுந்து நொறுங்கியதில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகவும் உக்ரைன் விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவால் ஏவப்பட்ட 10 ட்ரோன்கள்
படுகாயமடைந்த 2 குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில், கட்டடங்கள் பல சேதமடைந்ததாகவும், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனின் ஒடேசா பகுதியில் ரஷ்யாவால் ஏவப்பட்ட 10 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அங்கு அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |