முதல்முறையாக ஜோ பைடனிற்கு ஆதரவாக பேசிய புடின்
அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இரண்டாம் முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராவதை விட ஜோ பைடன் அதிபராவதையே ரஷ்யா விரும்புவதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டிருந்தார்.
பைடன் நீண்ட அனுபவம் உடையவர் மட்டுமல்லாமல் அவரது நடவடிக்கைகள் எளிதில் யூகிக்க கூடியவை என்றும் அவர் பழைய காலத்து அரசியல் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் கொண்டவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
யூகிக்க முடியாத முடிவு
ஆனால், டொனால்ட் டிரம்ப் அவ்வாறு அல்லாது, பிறரால் புரிந்து கொள்ளவோ அல்லது அவரது நடவடிக்கைகளை யூகிக்கவோ முடியாத முடிவுகளை டிரம்ப் எடுப்பதாகவும் புடின் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து டிரம்ப் கொண்டிருக்கும் சிந்தனைகளில் நியாயம் உள்ளது. ஆனால், முடிவு எடுக்க வேண்டியது வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எது எவ்வாறாயினும், அமெரிக்காவில் யார் அதிபராக பதவி ஏற்றாலும் அவர்களுடன் ரஷ்யா இணைந்து பணியாற்ற முடியும் என்பதையும் அவர் தெரியப்படுத்தியிருந்தார்.
சக்திவாய்ந்த வல்லரசு
எதிர்வரும் நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
அயல் நாடுகளுடன் உள்ள அமெரிக்காவின் உறவு நிலை குறித்து அதிபர் பைடனும், டிரம்பும் நேரெதிர் சித்தாந்தங்களை கொண்டுள்ள நிலையில், உலகின் சக்திவாய்ந்த வல்லரசு நாடான ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து கூறியிருக்கும் கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |