ரஷ்யாவின் முடிவால் பூகோள ரீதியில் திடீர் மாற்றங்கள்
உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யா பின்வாங்குவதை நம்பக்கூடியதாக இருப்பதாக இன்று உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜேர்மனியின் ஆட்சித் தலைவரான சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மொஸ்கோவில் ரஷ்ய அரசதலைவர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னணியில் உக்ரைன் எல்லைக்கு அருகில் இருந்து போர்த்தாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் வெளியேறும் காட்சிகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தது.
அமெரிக்க ஊடகங்கள் யாவும் நாளை புதன்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு நடக்கும் எனக் குறிப்பிட்டிருந்தாலும், இன்று ரஷ்யா அதற்கு எதிரான அறிகுறிகளை காட்டியிருப்பது புலப்பட்டுள்ளது.
எனினும் எத்தனை படைப்பிரிவுகள் எல்லையில் இருந்து மீளெடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
தெற்கு மற்றும் மேற்கு இராணுவ பிரிவுகள் ஏற்கனவே தொடருந்துகள் மற்றும் தரைவழியாக திரும்பத்தொடங்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், இகோர் கொனாஷென்கோவ் கூறியுள்ளார்.
ஐரோப்பிய தலைவர்களின் ராஜதந்திர முயற்சிகளின் பின்னணியில் உக்ரைன் உடனான தனது நெருக்கடியை தணிக்கும் முதலாவது சாதக அறிகுறிகளை ரஷ்யா இன்று வெளிப்படுத்தியதை அடுத்து பூகோள ரீதியில் சில மாற்றங்கள் உருவாகியுள்ளன.
குறிப்பாக மசகு எண்ணெயின் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று காலை 2.5 வீதமாக வீழ்ச்சியடைந்ததுடன் உலகளாவிய பங்குச் சந்தைகளும் சாதகநிலையை பெற்றுள்ளன. தங்கத்தின் விலையிலும் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ரஷ்ய - உக்ரைன் நெருக்கடியானது, ரஷ்ய எரிசக்தி விநியோகத்தில் தடங்கல்களை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையால் எரிசக்தி சந்தை அதிக எச்சரிக்கையில் கடந்த சிலவாரங்களாக இருந்த நிலையில் இந்த தணிவு வந்துள்ளது.
தொடர்புடைய செய்தி - https://ibctamil.com/article/tensions-with-russia-3rd-world-war-start-1644918673
