உக்ரைனுக்கு போதிய வெடிமருந்து இருப்பு இல்லை: ஒப்புக்கொண்ட நேட்டோ அதிகாரிகள்
உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மேற்குலக நாடுகளிடம் உக்ரைனுக்கு வழங்குவதற்கு போதிய வெடிமருந்து இருப்பு இல்லாமல் இருப்பதான எச்சரிக்கை நேட்டோ மற்றும் பிரித்தானிய அதிகாரிகளால் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வெடிமருந்து உற்பத்தியை அதிகரிக்குமாறு நேட்டோ நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக நின்றதாக கருதப்படும் அமெரிக்க கொங்ரசின் சபாநாயகர் கெவின் மக்கார்த்தி, தனது குடியரசுக்கட்சி சகாக்களால் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
புதிய நிச்சயமற்ற நிலை
இதன் பின்னர் உக்ரைனுக்குரிய அமெரிக்க உதவியின் எதிர்காலம் குறித்து மட்டுமல்ல உக்ரைனுக்குரிய வெடிமருந்து வினியோகத்திலும் புதிய நிச்சயமற்ற நிலை எழுந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யாவுடனான தனது போரை 20 வது மாதமாக எதிர்கொள்ளும் நிலையில், மேற்கின் வெடிமருந்து கையிருப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் களஞ்சியங்களில் வெடிமருந்து கையிருப்பு குறைவாக இருப்பதால் மேற்குலக நாடுகள் அதிக வெடிமருந்துகளை தயாரிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற அழைப்புகளை இராணுவ நிபுணர்கள் விடுத்துள்ளனர்.
எச்சரிக்கைகள்
உக்ரேனிய துருப்புக்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 2,000 முதல் 3,000 பீரங்கி குண்டுகளை ரஷ்ய துருப்புகள் மீது ஏவிவரும் பின்னணியில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு பலதரப்பட்ட வெடிமருந்துகளை அனுப்பிவருகின்றன.
எனினும் அவையாவும் தேவைப்படும் அளவுக்கு விரைவாக வழங்கப்படுவதில்லையென்பதை நேட்டோ அதிகாரிகள் சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்தே மேற்குலக படைத்தரப்பில் இருந்து உக்ரைனுக்கு வழங்குவதற்கான வெடிமருந்துகள் குறைவடைவதான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.