ஊடகங்களை மதிப்போம்!
ஒரு நாட்டின் உயரிய பதவியை வகிப்பவர்களைக் காட்டிலும் அதிகளவில் மரியாதையாக நடத்தப்பட வேண்டியவர்கள் ஊடகவியலாளர்கள்.
பேனா முனையில் போர் தொடுத்து அன்றாடம் நீதிக்காகவும், மக்களின் நல் வாழ்வுக்காகவும் களம் காணும் போர் வீரர்களாக ஊடகவியலாளர்கள் விளங்குகிறார்கள்.
இத்தகைய சக்திவாய்ந்த தொழிலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களும் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளும் வாழ்நாள் விரோதிகளாக சண்டைபோடுவது அனைவரும் அறிந்த சாதாரண விடயம் தான்.
தற்காப்பு நிலை
ஆனால், இந்த வாழ்நாள் எதிரி வீட்டிற்கு யாசகம் பெற அரசியல்வாதிகள் வரும் காலமும் உண்டு, தேர்தல் காலம் தொடங்கிவிட்டாலே அனைத்து பகையும் ஓரம் போய் ஊடகம் தான் வெற்றிக்கான ஓர் ஆயுதம் என அரசியல் வாதிகள் நட்பு பாராட்டும் காலங்களில் முன்னர் நடந்த வாய்த்தர்க்கங்களும் நினைவுக்கு வராது. பின்னர் அரங்கேறப்போகும் போராட்டமும் நினைவுக்கு வராது. அந்த வேளையிலே அறிவில் இருக்கும் ஒரே விடயம் தேர்தலில் வெற்றி வேண்டும் என்பது மாத்திரமே.
அதே, தேர்தல் முடிந்து விட்டால் மீண்டும் கீரியும் பாம்பும் சண்டையை ஆரம்பித்து விடும், இதில் அரசியல்வாதிகள் புரியும் ஊழல்,மக்கள் படும் இன்னல், இனவாதத்தால் நசுக்கப்படும் மக்களுக்கான குரல், புதைக்கப்பட்ட உடலங்களுக்கான நீதி, சிதைக்கப்பட்ட உயிர்களுக்கான தீர்வு என களம் காண விடயங்களுக்கு பஞ்சமா இருக்கப்போகிறது.
இலங்கையில் அரசியல் தலைவர்களின், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஊழல் மற்றும் மீறல்கள் குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டால் போதும், அது நேர்காணலாக இருந்தாலும் சரி பத்திரிக்கைச் செய்தியானாலும் சரி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல், தற்காப்பு நிலைக்குச் செல்வது இங்கே நீண்ட காலப் பழக்கமாகிவிட்டது.
இந்த அரசியல் தலைவர்கள், தங்கள் தோல்விகளைக் குறித்து ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டால், அவர்கள் தங்கள் தோல்விகளை ஒப்புக்கொள்ளாமல், தெளிவான பதில்களையம் சொல்லாமல், ஊடகங்கள் பக்கச்சார்பானவை என்று குற்றம் சாட்டுவதையும், 'தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை' சுமப்பதும் கண்கூடு காணலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களிலெல்லாம் இலங்கை, அரசியல்வாதிகளால் மனப்பாடம் செய்யப்பட்டு ஒப்புவிக்கப்படும் பொதுவான பதில், "இலங்கையில் விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்திருக்கிறோம், அதன் கீழ் நாங்கள் எங்கள் சொந்த விசாரணைகளை செய்வோம்" என்பது தான்.
சமூக ஊடகங்கள் உட்பட நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் : ரணில் விக்ரமசிங்க
ஊடக சுதந்திரம்
ஆனால் இந்த முடிவற்ற ஆணைக்குழுக்களின் எந்த விசாரணைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதியைப் பெற்றுத்தரவில்லை என்பதே நிதர்சனம்.
இல்லையேல் அரசியல் தலைவர்கள் பிரச்சினையை அதாவது அவர்களது முடிவில்லாத ஊழலை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை என்று கூட சொல்லலாம்.
எது எவ்வாறாயினும் மக்களுக்கு நீதியான விடயங்களை வழங்க வேண்டிய பொறுப்புச் சுமந்த முட்கிரீடத்தை தரித்திருக்கும் ஊடகவியலாளர்கள் பக்கச்சார்புடன் கேள்விகேட்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை
இதன் பேரில், ஊழல் புரியும் அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படும் அவமானங்களை ஏற்று கடந்து செல்ல வேண்டிய அவசியம் ஊடகவியலாளர்களுக்கோ ஊடகங்களுக்கோ இல்லை.
ஊடகமும், ஊடகவியலாளர்களும் அவரவர் கருத்துச்சுதந்திரத்திற்கேற்ப ஊடக சுதந்திரத்திற்கேற்ப செயற்படவேண்டும் அத்தகைய சூழல் உருவாக வேண்டும்.
சுட்டாலும் சங்குநிறம் மாறாது என்பது போல எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் தவறை சுட்டிக்காட்டுவதில் ஊடகம் எப்போதும் முன்னின்று உழைத்துக்கொண்டே இருக்கும்.
ஆகவே உண்மைக்காக உழைக்கும் ஊடகங்களை மதிப்போம்
நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!