மேற்குலக ஊடகத்திடம் சூடான ரணில்
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான பெரும் உதிரப்பழி குறித்தும் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் கொழும்பு அதிகார மையத்தின் அடிமடியில் இருக்கும் கணம் அவ்வாறான நாசகாரங்களை மையப்படுத்தி வினாக்களைத் தொடுக்கும் ஊடகர்கள் மீது சீற்றமான பார்வைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் அவ்வாறான சீற்றத்தை வெளிப்படுத்திய பட்டியலில் இணைந்திருக்கிறார்.
ரணிலை சீற்றப்படுத்திய வினாக்கள்
ஜேர்மனியில் அண்மையில் ரணில் விக்ரமசிங்க தங்கியிருந்த போது, ஜேர்மனியின் தேசிய ஊடகமான DW ஊடகத்தைச் சேர்ந்த ஊடகரான மார்டீன் ஹக் தொடுத்த கறாரான வினாக்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிய ரணில் விக்ரமசிங்க அதற்குப் பதிலாக ஊடகர் மீதே சீற்றமடைந்த காட்சிகள் வெளிப்பட்டுள்ளன.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகள் மற்றும் அது தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி கடந்த மாதம் வெளிப்படுத்திய ஆவணம் தொடர்பான விடயங்கள் மற்றும் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பான வினாக்களே ரணிலை கடுமையாகச் சீற்றப்படுத்தின.
செவ்வியின் பல இடங்களில் ஊடகரை சீற்றப்படுத்தி அவரை திசை திருப்ப ரணில் விக்ரமசிங்க முயன்றார். ஆயினும் ரணிலின் தந்திரோபாயத்தை புரிந்துகொண்ட ஊடகரும் விடாமல் வினாக்களைத் தொடுக்க ஒரு கட்டத்தில் ரணில் கடுமையாகச் சூடானார்.
இனவாத பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவ்வாறு செயற்படுகிறார்கள் என்கிறார் கெமுனு விஜேரத்ன
ரணில் ஜேர்மனியில் வைத்து வழங்கிய செவ்வியை நோக்கும்போது, 2010 ஆம் ஆண்டில் அப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச பிரித்தானியாவின் பிபிசி ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சீற்றப்பட்ட காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.
தமிழர்களின் உதிரப் பழியை மையப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றால், அது தொடர்பான கோரிக்கைகளுக்கு ஒரு போதும் அனைத்துலக விசாரணைகளுக்கு உடன்பட மாட்டோம் என செவ்வியின் ஒரு கட்டத்தில் ரணில் அழுத்தமாக கூறியிருக்கிறார்.
அத்துடன் இலங்கையின் மனித உரிமை மீறல்களை மையப்படுத்தி மேற்குலக ஊடகங்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறை குறித்தும் ரணில் விக்ரமசிங்க கடுமையாகச் சாடியிருந்தார்.
மேற்குலக அணுகுமுறை
இதன் பின்னர் ரணில் விக்ரமசிங் பொறுமையை இழந்து ஊடகர் மீது கருத்தியல் ரீதியாக பாய்ந்து, அவர் முட்டாள்தனமாக பேசுவதாகவும், இவ்வாறான கேள்விகளை தன்னிடம் கேட்பதற்கு அவருக்கு உரிமை இல்லை எனவும் அனைத்துலக விசாரணைகளைக் கோருவதன் மூலம் இலங்கைக்குள் அனைவருமே புகுந்து அந்த தேசத்தை இரண்டாம் தர குடிமக்கள் வாழும் தேசமென கருதப்படக் கூடிய நிலை ஒன்றை நீங்கள் நினைக்கின்றீர்களா என ஊடகர் மீதே ரணில் சீறினார்.
அதன் பின்னர், இவ்வாறான மேற்குலக அணுகுமுறைகள் அகற்றப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
நேர்காணல்களில் மிதவாதப் போக்கை கடைபிடிக்கும் ரணில் ஜேர்மனியில் வைத்து கடுமையாக சீற்றப்பட்டதற்கு காரணம் அவர் அனைத்துலக ரீதியில் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் இல்லையென்றால், சனல் நான்கு தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணங்கள் தொடர்பான விமர்சனங்களாக இருக்க கூடும்.