நாளை மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் : தமிழ் பேசும் மக்களுக்கு அழைப்பு
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் நாளையதினம்(4) மனிதச் சங்கிலிப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
மனிதச் சங்கிலிப் போராட்டம் வெற்றியளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
முழுமையான எதிர்ப்பு
மருதனார்மடம் சந்தியில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பம் ஆகும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி முட்டாஸ் கடை சந்தியில் காலை 10 மணியளவில் நிறைவடையவுள்ளது.
எனவே அனைத்து தமிழ் மக்களும் கட்சி பேதங்களை கடந்து எமது முழுமையான எதிர்ப்பினை காட்டும் முகாமாக குறித்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டடத்தில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
பொதுமக்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,வர்த்தகர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள் ,அரசியல்வாதிகள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு அனைவரும் ஒன்றிணைத்து எமது எதிர்ப்பினை காட்டுவதன் மூலமே நீதிதுறையின் சுயாதீனம் மற்றும் நீதிபதிகளின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய முடியும்.
எனவே அனைவரும் அணிதிரண்டு எமது கண்டனத்தை இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் காட்டுவோம் என்றார்.
இதேவேளை, முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு ஆதரவு கோரி சுன்னாகம் பகுதியில் இன்று காலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
நாளை புதன்கிழமை(04) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன அழைப்பு விடுத்துள்ளன.