அதி எச்சரிக்கை நிலையில் உக்ரைன்..!
உக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு நாளை ஓராண்டு பூர்த்தி அடையும் நிலையில், ரஷ்யாவின் ஏவுகணைகளால் உக்ரைன் அதிரும் வாய்ப்புகள் காணப்படுகின்றமை குறித்து உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும் உக்ரைன் மண்ணில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ரஷ்யாவை பொறுப்புக் கூற வைப்போம் என உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய பின்னர் உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார்.
ரஷ்யாவின் படை நடவடிக்கை

இந்த நிலையில் அணு வல்லமை கொண்ட சர்மாட் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நிலைநிறுத்தவுள்ளதாக ரஷ்ய அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பானது தீவிர கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு நாளை ஓராண்டு நிறைவடையும் நிலையில், ரஷ்யா தமது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் படைப் பிரிவுகளை உடைப்பதற்கு ரஷ்யா போராடி வருகின்றது எனவும் அண்மைய அணிதிரட்டல் வளத்தின் நன்மையை கொண்டுள்ள எதிரி, திட்டமிட்டு மோதல்களை தீவிரப்படுத்தியுள்ளது எனவும் உக்ரைனிய பிரிகேடியர் ஜெனரல் ஒலெக்ஸி க்ரோமோவ் சுட்டிக்காட்டியு்ளளார்.
கோடை காலத்தில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் முழுவதையும் கைப்பற்றும் இலக்கை அடைய ரஷ்யா முயல்வதால், கிழக்கு நகரமான பஹ்மூத்தை சூழவுள்ள பகுதிகளில் கடுமையான மோதல்கள் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா அண்மையில் அணிதிரட்டிய துருப்புக்களை போரில் ஈடுபடுத்தியுள்ளால், பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருவதாக உக்ரைனிய பிரிகேடியர் ஜெனரல் ஒலெக்ஸி க்ரோமோவ் குறிப்பிட்டுள்ளர்.
ஏற்கனவே பல மாதங்களாக பஹ்மூத் நகரை கைப்பற்றுவதற்கான போரில் வழக்கமான பிரிவுகளை விடுத்து சிறப்பாக தயார்படுத்தப்பட்ட வீரர்களைப் பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ரஷ்யாவுடனான போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி, ரஷ்யப் படைகளை விட உக்ரைன் படைகள் "மேலோங்கி நிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.
தாம் உடைந்து போகவில்லை எனவும் பல சோதனைகளை கடந்தே தாம் வந்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், இந்த யுத்தத்தில் வெற்றிபெறுவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அனைத்து பயங்கரவாதம், கொலைகள் மற்றும் சித்திரவதைகளை உக்ரைன் நிலப்பரப்பில் மேற்கொண்டவர்களை பொறுப்புக்கூற வைப்போம் எனவும் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

இந்த நிலையில் சர்மாட் 2 என அழைக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் திவர எரிபொருள் ஏவுகணையை இவ்வாண்டு நிலைநிறுத்தப் போவதாக விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உக்ரைனுக்கான விஜயத்திற்கு முன்னதாக சர்மாட் 2 என்ற ஏவுகணையை ரஷ்யா பரிசோதனை செய்திருந்த போதிலும் அது தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு எந்தக் கருத்தையும் வெளியிடாத போதிலும், இந்த ஏவுகணை 18 ஆயிரம் கிலோமீ்றறர் தூரம் வரை பயணிக்க கூடியதாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அணு ஆயுத வல்லமையுடன் வெவ்வேறு இலக்கை இலக்காகக் கொண்டு தாக்க முடியும் என்பதுடன், அதன் பாதையை கணிக்க முடியாத வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.