நவல்னியின் உடல் வழங்கப்படமாட்டாது! காரணத்தை கூறிய ரஷ்யா
ரஷ்ய சிறைச்சாலையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் இரண்டு வாரங்களுக்கு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரசாயன பகுப்பாய்வுகள் நிறைவடையும் வரை அவரது உடல் குடும்பத்தாரிடம் வழங்கப்படாதென நவல்னியின் தாயாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நவல்னியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவரின் உடல் தற்போது எங்குள்ளது தொடர்பான தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
நஞ்சுத்தன்மையை நீக்கும் நடவடிக்கை
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட அலெக்ஸி நவல்னியின் உடலில் உள்ள நஞ்சுத்தன்மையை நீக்கும் நடவடிக்கைக்காக அவரது உடல் இரண்டு வாரங்களுக்கு இரசாயண பகுப்பாய்வுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் உடலை குடும்பத்தாரிடம் வழங்க மறுக்கப்படும் நடவடிக்கையின் பின்னணியில், வேறு அரசியல் சதித் திட்டங்கள் இருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
புடினால் கொலை செய்யப்பட்ட நவல்னி
மேலும், அலெக்ஸி நவல்னி கொலை செய்யப்பட்டிருப்பது ரஷ்ய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யா அதிபர் புடினால் கொலை செய்யப்பட்ட தனது கணவரின் உடலை இரகசியமாக மறைத்து வைக்க சில தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக மறைந்த எதிர்க்கட்சித் தலைவரின் மனைவி யூலியா நவல்னயா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |