எமது கையை அறுத்து தந்தை செல்வாவுக்கு இரத்தத் திலகமிட்டவர்கள் நாங்கள் - காரைதீவில் எமது ஆட்சியே!
இலங்கை தமிழரசு கட்சியின், தந்தை செல்வாவுக்கு 13 வயதில் கையை வெட்டி இரத்தத் திலகமிட்டவர்கள் நாங்கள். தேவையேற்படின் விளக்குடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி வேட்பாளர் கணபதிப்பிள்ளை தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அம்பாறை ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"ஈழத்து காந்தி என அழைக்கப்படுகின்ற தந்தை செல்வா காரைதீவிற்கு வந்தபோது எனக்கு வயது 13. அன்று நான் உட்பட பல இளைஞர்கள் கையை பிளேட்டால் வெட்டி அவருக்கு இரத்த திலகமிட்டவர்கள்.
மீண்டும் தமிழரசு கட்சியின் ஆட்சியே

அன்றிலிருந்து இன்று வரை நான் தமிழரசுக் கட்சியிலேயே தடம் புரளாமல் இருந்து வருகிறேன். அதுமட்டுமன்றி, பொதுச் சேவையில் சிறுவயதில் இருந்தே என்னை இணைத்துக் கொண்டவன் நான். காரைதீவு பிரதேச சபை சார்பில் இம்முறை மூன்றாம் வட்டாரத்தில் போட்டியிடுகிறேன்.
கடந்த மூன்று தடவைகளில் இலங்கை தமிழரசுக்கட்சி காரைதீவில் ஆட்சி செய்து வந்தது. இம் முறையும் 4 வட்டாரங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் வேறுபட்ட கருத்துக்களில்லை.
அண்மையில் பசில் ராஜபக்ச கூறியிருந்தார், நாம் வடக்கில் வீணையிலும், கிழக்கில் படகிலும் வருகிறோம் என்று. இவர்கள் எதில் வந்தாலும் வடக்கு கிழக்கு மக்கள் அவர்களை நிச்சயம் நிராகரிப்பார்கள். எமக்கு சவாலாக எந்த கட்சியும் இல்லை.
யாருடன் இணைவது?

அதற்காக ஏனைய கட்சிகளை தரக்குறைவாக கூறப்போவதும் இல்லை. எமது வெற்றி நிச்சயம். 196 பேரை நிறுத்தலாம், சதி செய்யலாம், இலவசங்கள் வழங்கலாம், போலிகள் வரலாம், போகலாம் ஆனால், காரைதீவு மக்கள் தெளிவானவர்கள், படித்தவர்கள் அவர்கள் ஏமாற மாட்டார்கள்.
தமிழ் தேசியத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவர்கள். அதற்கு கௌரவம் அளித்து மதிப்புடன் வாக்களிப்பவர்கள். எனவே வெற்றி நிச்சயம்” எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குத்துவிளக்குடன் இணைவோம்

அதேவேளை, ஆட்சியமைக்க மேலும் ஆசனம் தேவைப்பட்டால் எந்த கட்சியுடன் இணைவீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது,
“நாம் தேர்தலுக்காக மட்டுமே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து நிற்கின்றோம். பின்னர் இணைந்து ஆட்சி அமைப்போம் என்று எமது தலைவர் மாவை சேனாதிராஜா அண்மையில் கூறியிருந்தார்.
இது அண்ணன் தம்பி பிரச்சினை, சாதாரணமான பிரச்சினை. இது நிரந்தர பிரிவல்ல. அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக ஒன்றாக இருந்தவர்கள். சகல விசயத்திலும் பங்கெடுத்தவர்கள். எனவே சந்தர்ப்பம் வரும்போது நாங்கள் குத்துவிளக்குடன் இணைந்தே தான் ஆட்சி அமைப்போம். இது தலைமைப்பீடத்தின் முடிவு எனது முடிவும் அதுதான்” எனவும் தெரிவித்துள்ளார்.
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        