சங்குக்கு வாக்களிக்க சொன்னவர்கள் தற்போது அநுரவின் காலில்....! செ.கஜேந்திரன் சாடல்
அநுரவுக்கு வாக்களிக்கக் கூடாது சங்குக்கு வாக்களிக்க வேண்டும் என்றவர்கள் தேர்தல் முடிந்து ஒரு வார காலத்துக்குள்ளே ஓடோடிச் சென்று அநுரவின் காலில் விழுந்திருக்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான செல்வராசா கஜேந்திரன் (S.Kajendran) தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று செல்வராசா கஜேந்திரன் (S.Kajendran) குறிப்பிட்டுள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கவர்ச்சிகரமான விளம்பரங்கள்
மேலும் தெரிவிக்கையில், "தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பிரசாரங்களை முன்னெடுத்து தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
75 வருடங்களாக ஆட்சிப் பீடத்தில் இருந்த ஐ.தே.க, ஶ்ரீலங்கா.சு.க, மொட்டுக் கட்சியினர் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நாட்டை சின்னாபின்னமாக்கி வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள்.
இந்த நிலையிலே சிங்கள மக்களுக்கு நேர்மையாக செயற்பட்ட ஜே.வி.பி. யினர் பல வருடங்களுக்குப் பின் இந்நாட்டின் ஜனாதிபதியாக வந்திருக்கலாம்.
இவர்கள் அரச புலனாய்வுக்காரர்களுக்கு எவ்வளவு விசுவாசமாக செயற்பட்டிருப்பார்கள் என்பதையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊழல்வாதிகளுடன் இணைந்து ஆட்சி
வடக்குக் கிழக்கிலே பார்பொர்மிட் வழங்கி பெரும் இலஞ்சம் வழங்கப்பட்டதாகவும் அதனை வெளியிடப் போவதாகவும் கூறியவர்கள் அதனைப் பின்னர் ஒழித்துவிட்டார்கள்.
காரணம் தமக்கு நாடாளுமன்றலே பெரும்பான்மை கிடைக்காத பட்சத்திலே இந்த ஊழல் வாதிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டுமென்பதற்காக அந்த பார் லைசன்ஸ் விவகாரம் ஒழிக்கப்பட்டிருக்கிறது.
அதை விட அநுரவுக்கு வாக்களிக்கக் கூடாது சங்குக்கு வாக்களிக்க வேண்டும் என்றவர்கள் தேர்தல் முடிந்து ஒரு வார காலத்துக்குள்ளே ஓடோடிச் சென்று அநுரவின் காலில் விழுந்திருக்கிறார்கள்.
சங்குக்கு வாக்களித்த மக்களின் கோரிக்கையை முன்வைக்கவில்லை மாறாக தமது ஊழல்களையும் பெற்றுக் கொண்ட சலுகைகளையும் வெளிப்படுத்த வேண்டாம் என்றும் தாம் நாடாளுமன்றிலே உங்களது ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கியதால் தான் அது மூடி மறைக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.