அதிபர் தேர்தலில் ரணிலுக்கு மொட்டுக் கட்சியின் ஆதரவு தேவை: எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டு
அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகைமை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremasinghe) உண்டு என்பதால் அந்தத் தேர்தலில் ரணிலுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முழு ஆதரவு வழங்க வேண்டுமென ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க (S.B.Dissanayake) கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே குறித்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மே தினக் கூட்டத்தில் அதிபர் தேர்தலுக்கான கருத்துக்கள் மாத்திரம் வெளிப்பட்டதே தவிர தொழிலாளர்களின் உரிமை பற்றி எந்த அரசியல் கட்சி மேடைகளிலும் பேசப்படவில்லை.
அரசியல் கூட்டம்
மே தினக் கூட்டம் அரசியல் கூட்டமாக மாற்றமடைந்துள்ளமை கவலைக்குரியது. அத்தோடு அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா பொதுஜன பெரமுன ரணிலிடம் பலமுறை முன்வைத்துள்ள போதும் அவரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.
அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலை முதலில் நடத்தும் சூழல் காணப்படுவதுடன் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகைமை ரணிலுக்கு உண்டு எனவே, அந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவு வழங்க வேண்டும்.
அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக அரசை அமைப்பது குறித்து பொதுஜன பெரமுன விசேட கவனம் செலுத்துவதுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுனவைப் பலப்படுத்தும் பொறுப்பு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர்கள்
கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொள்ளுமாறு கட்சியின் தலைவர்கள் மற்றும் தேசிய அமைப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) இவ்விடயம் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் (Dinesh Gunawardena) பேச்சில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், கட்சியில் இருந்து விலகிச் சென்ற சிரேஷ்ட உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக்கொண்டு ஒன்றிணைந்து செயற்பட்டால் சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் பலமான அரசை அமைக்கலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |