சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சப்ரகமுவ பல்கலைக்கழக (Sabaragamuwa University of Sri Lanka) மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்கைளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான சரித் தில்ஷான் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்ததாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம்சாட்டினர்.
விசாரணைக் குழு
இத்தகைய சூழலில், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்கல்வி அமைச்சு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்தவால் மூன்று பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில், சரித்துடன் பகிடிவதைக்கு உள்ளானதாக கூறப்படும் 20 மாணவர்களிடமிருந்து சமனலவெவ காவல்துறையினர் அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
நீதிமன்ற உத்தரவு
பின்னர், பகிடிவதை சம்பவம் தொடர்பான விசாரணை, பதில் காவல்துறைமா அதிபரின் உத்தரவின்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் இன்று (16.05.2025) பலாங்கொடை (Balangoda) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
